Saturday, October 30, 2010

சும்மா இரு; சுகம் அறி!

சும்மா இருப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதை தானே உணர்ந்ததால் தான் தாயுமான சுவாமிகள் ‘சும்மா இருக்கும் சுகமறியனே’ என்றார்.
அது எவ்வளவு முடியாததொன்று என்பதை தாயுமானவரே பாடியிருக்கிறார்.
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
(மதங் கொண்ட யானையை வசப்படுத்தி நடக்க
விடலாம்)
கரடிவெம் புலிவா யையும்
கட்டலாம் ஒருசிங்க முதுகின் மேற்கொள்ளலாம்
(கரடி புலிகளின் வாயைக்கட்டி, சிங்கத்தின்    
முதுகிலேறி சவாரி செய்யலாம்)
கட்செவி யெடுத்தாட் டலாம்
(காதை தனியே எடுத்து ஆட்டலாம்)
வெந்தழலி னிரதம்வைத்து ஐந்து லோகத்தையும்    
வேதித்து விற்றுண் ணலாம்
(யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி
ஐந்து லோகத்தையும் கையில் கொண்டு
விற்று சாப்பிடலாம்)
வேறொருவர் காணாமல் உலகத்து உலவலாம்
(யார் கண்ணிலும் படாமல் உலகத்தில்
நடமாடலாம்)
விண்ணவரை ஏவல் கொளலாம்
(வானிலுள்ள தேவர்களுக்கு கட்டளையிட்டு
வேலை வாங்கலாம்)
சந்ததமும் இளமையொடிருக்கலாம்
(எந்த வயதிலும் இளமை பொருந்திய
உடலோடிருக்கலாம்)
சலம் மேல் நடக்கலாம் கனல்மே லிருக்கலாம்
(நீரின் மீது நடக்கலாம் நெருப்பின்மீது இருக்கலாம்)
சிந்தையை அடக்கியே சும்மா விருக்கின்ற    
திறமரிது.
(எண்ணங்கள் எழாமல் அடக்கி
சும்மா இருக்கக்கூடிய திறன் என்பது
அரிதானது, எளிதானதல்ல,)
இவ்வளவு கடினமான, எளிதில்
அடைய முடியாத கடுந்தவங்களுக்
கெல்லாம் மேலானதான
சிந்தையை அடக்கி
சும்மா இருக்கும் திறனை
சும்மா நீ அவரருகே அமர்ந்தாலே
அடைய முடிகிறதென்றால்
அவர் சும்மாவா?
எவ்வளவு வலிமை வாய்ந்த
சும்மா இருக்கும் வாய்ப்பை
உனக்கு சுலபமாக அடையத் தருகிறாரே
அவர் அதுவல்லாமல் எது?
......................

இனிப்புக் கடையில் சிக்கிக் கொண்ட
எறும்பு இனிப்பு சாப்பிடமாட்டேன்
என்று பிடிவாதம் பிடிப்பது போலத்தான்
சும்மா இருப்பது.

விளையாட்டு மைதானத்திற்கு
குழந்தையை கூட்டிப்போய் விட்டு
எதுவும் விளையாடாதே சும்மா இரு
என்பது போலத்தான்.

எனது நண்பர் ராபின் மறைந்த
வலம்புரிஜான் சொன்னதாக கேலியாக
ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்வார்.
அதன் ஆழமான அர்த்தம்
பாபாவை சந்தித்த பிறகே புரிகிறது.

வலம் புரிஜானை பார்க்க
ஒரு நண்பர் வந்திருக்கிறார், அவருடன்
ஒரு இளைஞர்
பரஸ்பர விசாரிப்புக்குப்பின்
வலம்புரிஜான் நண்பரிடம்,
தம்பி யாரு, என்ன செய்கிறார்
என்று கேட்க
நண்பர் தம்பியின் பேரைச் சொல்லி
சும்மாதான் இருக்கிறார் என்று
சொல்ல
வலம்புரிஜான், ‘அது ரொம்ப
கஷ்டமான வேலையாச்சே’
என்று சொல்லியிருக்கிறார்.
சும்மா இருப்பது  என்பது கேலிக் குறியதல்ல.
எவ்வளவு கஷ்டமானது
என்பதைத்தான் தாயுமானவ சுவாமிகள்
கூறியுள்ளார்.

பரஞ்ஜோதி பாபா
அப்படியெல்லாம் சொல்வதில்லை
ஆனால் அவர் அருகேயமர்ந்தால்
சும்மா இருக்கும் சுகமறியலாம்
‘அந்த சும்மா இருத்தல்’
பணத்தால் பதவியால் லௌகீக
எந்த அளவிடலிலும் அடங்காத
பெருஞ்செல்வம்.
வேண்டுதல்
வேண்டாமை இல்லாத
சும்மா இருத்தல்.
..........

No comments:

Post a Comment